முன்னுரை
சங்க இலக்கியம் தமிழர்களின் தொல்வரலாற்றுக்கான ஆவணமாக உள்ளது. இலக்கியம் என்ற நிலையைக் கடந்து மானிடவியல், வரலாற்றியல், ஒப்பியல் ஆகியவற்றை உள்ளடக்கியதாய் சங்க இலக்கியம் உள்ளது. சங்கப்பாடல்களில் பல்வேறு சடங்குகள் இடம் பெற்றுள்ளன. இச்சடங்குகளில் வெறியாடல் என்ற சடங்கும் அடங்கும். இந்த வெறியாடல் களவுக் காதலில் ஈடுபட்டு அதன் விளைவாக மெலிவு ஏற்பட்ட பெண்களுக்கு நிகழ்த்தப்படுவது. வெறியாடல் பெண்களைச் சார்ந்து பெண்களுக்காகப் பெண்களால் நிகழ்த்தப்படும் ஒரு சடங்கு. வெறியாடலின் பிரதானமாக அமைவது வேலன். பெரும்பாலும் செவிலித்தாயும், நற்றாயும் தலைவியின் மெலிவுகண்டு அதற்கான காரணத்தை ஆராய்வதற்காக வெறியாட்டிற்கு ஏற்பாடு செய்வர். இந்த வெறியாடல் குறித்த செய்திகள் சங்க இலக்கியத்தில் மட்டுமல்லாது தொல்காப்பியத்திலும் இடம் பெற்றுள்ளன. இத்தகையத் தொன்மையான வெறியாட்டானது தற்காலத்தில் எவ்வாறு வளர்ச்சி அடைந்துள்ளது என்பதை சங்க இலக்கியத்தோடு ஒப்பிட்டு விளக்குவதாய் இக்கட்டுரையானது அமைந்துள்ளது.
நாடகமும், கூத்தும்:-
நாடு + அகம் = நாடகம். நாட்டை அகத்தில் கொண்டது நாடகம். அதாவது நாட்டின் சென்ற காலத்தையும் நிகழ்காலத்தையும் வருங்காலத்தையும் தன் அகத்தே காட்டுவதால் நாடு - அகம் - நாடகம் என்று பெயர் பெற்றிருக்கிறது என்பார் அவ்வை.டி.கே.சண்முகம். (அவ்வை.டி.கே.சண்முகம், 1959)
‘நாடகம்’ என்ற சொல்லின் அடிச்சொல் ‘நடி’ என்பதாகும். நடித்தல் என்பது தொழிற்பெயர். நடிப்பது நாடகம் ஆயிற்று எனக்கூறுவர். நாடகமாவது கதை தழுவிய கூத்து என்பர். அரங்க சுப்பையா. (அரங்கசுப்பையா, 2007)
கூத்துக்களின் வளர்ச்சி நிலையில் நாடகம் உருவானது. தனக்கென நாடகம் உருவானது. தனக்கென நாடகம் உருவானது; தனக்கென ஓர் அமைப்பையும், உருவத்தையும் பெற்றுக் கொண்டது. நாட்டின் நாகரிகம் பண்பாடு ஆகியவற்றைக் காட்டும் அளவிற்கு நாடகம் உயர்நிலையில் வளர்ந்தது. “நாடகம் கலைக்கரசு; நாட்டின் நாகரிகத்துக்குக் கண்ணாடி; பாமரமக்களின் பல்கலைக் கழகம்; உணர்ச்சியைத் தூண்டிவிட்டு, உள்ளத்தில் புதைந்து கிடைக்கும் அன்பையும், அறிவையும், தூய்மையையும் வெளிப்படுத்தி மக்களைப் பண்படுத்தும் மகத்தான கலை நாடகக்கலை” என்பார். அவ்வை.டி.கே.சண்முகம். (அவ்வை.டி.கே.சண்முகம், 1959).