Skip to main content


“மயிலேரும் இராவுத்தன் இராஜாமுகமது”

Issue Abstract

 

                இயல், இசை, நாடகம் என்னும் முப்பெரும் பிரிவினை உடையது தமிழ் மொழி.இவ்வகை இணைந்த பகுப்பு வேறு எந்த மொழியிலும் இல்லை.நாடகம் இறுதியில் இருந்தாலும், இயலையும் இசையையும் தன்னுள்ளே கொண்டிருப்பதால் நாடகத்தின் முதன்மையை நன்கு அறியலாம்.இயலிசையால் காதுக்கும், கூத்தால் கண்ணுக்கும் இன்பம் பயக்கும் இக்கலையினை “பாமர மக்களின் பல்கலைக்கழகம்” என்கிறார் நாடகக் கலைஞர் டி.கே.சண்முகம்.தனி பாடல்களுக்கு அபிநயம் பிடித்து ஆடுவதை ‘நாட்டியம்’ என்றும், ஏதேனும் ஒரு கதையை தழுவி வேடம் புனைந்து ஆடுவதை ‘நாடகம்’ என்றும் சொல்லியிருக்கிறார்கள்.

                பிறர் செய்வது போலவே நாமும் செய்து காட்டுவது என்னும் விளையாட்டு உணர்ச்சியின் விளைவே நாடகம். தொடக்கத்தின் மரப்பாவை கூத்தாகிப் பரிணமித்து பொம்மலாட்டமாகவும், தோற்பாவைக் கூத்தாக வளர்ந்து, நிழற்பாவைக் கூத்தாகச் சிறந்து, இறுதியில் உயிரற்ற பொம்மைகள் இயங்குவதற்கு மாறாக உயிருள்ள மாந்தர்களே வேடம் புனைந்து ஆடும் நிலைக்கு வந்து நாட்டியமாகி, நாட்டிய நாடகமாகி இன்றைய நாடகக் கலையாக வளர்ந்துள்ளது. விளையாட்டு உணர்வால் தோன்றியதால் என்னவோ இன்னும் “வேடம் கட்டி விளையாடுவது” என்று நாடகத்தைச் சொல்கின்றனர்.

                பரந்து விரிந்த இஸ்லாம் மதத்தில் இன்றைய படைப்புக்களையும், படைப்பாளிகளையும் பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம்.முஸ்லிம் புலவர்கள் இசைப்பாடல்கள் மூலம் தமிழுக்கும், தமிழிசைக்கும் பல படைப்புகளை அள்ளித் தந்துள்ளனர்.19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த குணங்குடி மஸ்தான் சாகிபு அவர்களின் இசைப்பயணம் தொடங்கி இன்றுவரை உள்ளவர்களின் இசை ஆர்வத்தை ஆராய்ச்சி செய்து பார்க்கையில் இசையின் மீது மிகுந்த ஈடுபாடு உள்ளவர்களாக இஸ்லாமியர்கள் திகழ்ந்துள்ளனர் என்பது தெரியவருகிறது. அந்த வகையில், இன்று தமிழகத்தின் தென்மாவட்டங்களில் கோவில்களில், கிராம திருவிழாக்களில் நாடகம் பார்க்க வரும் எல்லோருக்கும் அறிமுகமான நாடகக் கலைஞர் சேக். சாகுல் ஹமிது என்னும் இராஜாமுகமது அவர்களின் இசைப்பயணத்தை வெளிக்கொணரும் முயற்சியாக இப்பதிவு அமைகிறது.


Author Information
முனைவர் வ.அண்ணாதுரை,
Issue No
11
Volume No
5
Issue Publish Date
11 Nov 2023
Issue Pages
1-6

Issue References

முடிவுரை

                இஸ்லாமிய சமயத்தைச் சேர்ந்தவராக இருந்த போதும் எந்தவித விருப்பு வெறுப்புமின்றி கோயில்களின் விழாக்களில் தன்னுடைய பங்களிப்பைக் கொடுத்துள்ளார்.இந்து சமயத்தைச் சேர்ந்த கோயில் நிர்வாகத்தினரும் இவரை ஏற்றுக் கொண்டுள்ளனர்.அந்த மக்களும் இதனை ஒப்புக் கொண்டுள்ளனர்.விழாக்கள் தோரும் இவரையே முன்னிறுத்தி அழைக்கப்பட்டிருக்கிறார். இந்து முஸ்லீம் சமூகங்களுக்கிடையே நாடகக் கலையின் மூலம், சமரசப் போக்கைக் கொண்டு வர ஒரு வகையில் இவர் முயன்றிருக்கிறார் என்பதையும் உணர முடிகிறது. இது தவிர, இஸ்லாமிய இறைநேச செல்வர்களின் அடக்க தலங்களாகிய தர்காகளிலும் இவர் இசை பங்களிப்புச் செய்துள்ளார்.நாகூர் தர்காவில் நடைபெறும் சந்தனக்கூடு விழாவின் போது, முதல்நாள் நடைபெறும் இசைப் பங்களிப்பை இன்றுவரைசெய்து வருகிறார்.இவருடைய இசைத் தொண்டுக்கு உறுதுணையாய் நிற்பவர் இவரின் துணைவியார் ஆவார்.இவருக்குப்பின் இவ்வளவு ஆற்றல் நிறைந்த ஒரு கலைஞனாக இவரது வாரிசுகள் வராதது நாடக உலகிற்கு மிகப் பெரிய இழப்பு. அரசியல் தலைவர்கள் பலர் அழைத்த போதும், எந்த கட்சியிலும் சேராமல், அன்போடு மறுத்துவிட்டு தற்போது, தொலைபேசிதுறையில் கண்கானிப்பாளராகப் பணிபுரிந்து வருகிறார்.பகலிலே தொலைபேசி ஊழியன்.இரவிலே நாடக நடிகன் என இவரது வாழ்வு பயணித்து கொண்டிருக்கிறது.நாடக உலகில் இருந்துவிலகிவிடலாம் என்று நினைத்தாலும், பல ஊர்களிலே இவரை விடுவதில்லை.எனினும், இஸ்லாமியப் பாடகராக தான் சாதிக்க வேண்டும் என்பதே, இவரது நிகழ்கால எண்ணம்.